Thursday, July 22, 2010

ஆறுதல்இருபது வருடங்களாகிறது,என்னுடைய சொந்த ஊருக்கு போய் ...இதோ நாளை கிளம்ப போகிறேன். என்னுடைய பள்ளி வாழ்க்கையும் கல்லூரி வாழ்க்கையும் தொலைந்து போன இடம். படிப்பு முடிந்து,ஊரை விட்டு வந்து சென்னையில் தனியார் கம்பெனியில் கம்ப்யூட்டர் உதவியாளராக பணி கிடைத்து பின்னர் என்னுடைய படிப்படியான முன்னேற்றம், என்னை வெளி நாடு அனுப்பியது. பின்னர் திருமணம் , குழந்தைகள் எல்லாம் அங்கேயே. என்னுடைய ஒரே ஆசை , இறுதி காலத்தை சொந்த ஊரில் செலவிட வேண்டும் என்பதே. எவ்வளவு வயதானாலும், நம்முடைய இளமை கால நினைவுகள் நமக்கு ஆறுதல்தான்.யாரோ என்னுடைய பின்னால் வருவது தெரிந்து திரும்பினேன், என் மனைவிதான். "என்னங்க இன்னும் தூங்கலையா !!!! " என்று கேட்டுக்கொண்டு அருகில் வந்தாள். "எப்படி தூக்கம் வரும், இவ்வளவு வருடங்களுக்கு பிறகு ஊருக்கு போகிறோம்..!!! " என்று சொல்லிகொண்டே கண்ணை மூடினேன். தூங்க முயற்சி செய்தேன். தூக்கம் வர மறுத்தது..!!!!


இரவு எப்போ தூங்கினேன் நினைவில்லை, என்னங்க எழுந்திரிங்க, காபி ரெடி என்ற என்மனைவியின் குரல் என்னை எழுப்பியது. மெதுவாக எழுந்து உட்கார்ந்தேன்..இன்னும் என் உற்சாகம் குறைய வில்லை. இன்று மாலை கிளம்பப்போகிறோம். என்னுடைய பழைய நண்பர்களை சந்திக்க போகிறேன், இதோ இன்னும் இரண்டு நாட்கள், எங்கள் பூர்வீக மக்களை சந்திக்க போகிறேன். மனசு முழுவது ஆனந்தம்.

இரண்டு நாட்கள் நீண்ட பயணத்திற்கு பிறகு, நான் என் மனைவி மற்றும் என் மகன்,  கோவை வந்து இறங்கினோம். என் மகன் பிறந்து வளர்ந்தது எல்லாம் வெளிநாடு என்பதால் அவனுக்கு இது புதிய அனுபவம்தான். என் முகத்தில் ஒரு இனம் புரியாத சந்தோசம். என் தாய் நாடு எவ்வளவு அழகு.

என்னுடைய ஊர் கோவையில் இருந்து திருப்பூர் செல்லும் வழியில் உள்ள ஒரு சின்ன கிராமம், விமான நிலையத்தில் இருந்து , கார் வாடகைக்கு எடுத்து கொண்டு கிளம்பினோம். இன்னும் இரண்டு மணி நேரம், என்னுடைய பூர்வீக பூமியில் நான். இருந்தாலும் என் மனதில் ஒரு இனம் புரியாத கவலை, என் பழைய நண்பர்கள், சொந்தங்கள் இன்னும் இந்த ஊரில் இருப்பார்களா ....!!!!???? மனதில் ஆயிரம் கேள்விகள் ...!!!!

கார் எங்கள் ஊருக்குள் நுழைந்தது. இது நான் வாழ்ந்த ஊரா..? ஆச்சரியமாக இருந்தது ..பல மாற்றங்கள் ..நான் பார்த்த மண் ரோடுகள் இல்லை ... பசுமை நிறைந்த வயல் வெளிகள் இல்லை. ஒரு பெரியவர் மந்தையில் ஆடு மேய்த்து கொண்டு இருந்தார். வெறுமையாய் உணர்ந்தேன். டிரைவர் "கொஞ்சம் காரை நிறுத்துப்பா" என்றேன். காரை விட்டு இறங்கினோம். பெரியவர் தன் கையை கண்களுக்கு கொடுத்து எங்களை பார்த்தார்.  தம்பி யாருன்னு தெரியலயே..? புதுசா வரிங்களா? என்றார் ... எனக்கு அவரை நன்றாக தெரிந்தது, நான் சிறுவனாக இருக்கும் போது, எங்கள் ஊரில் மளிகை கடை வைத்து இருந்தவர். நான் அவர் அருகில் சென்றேன். அய்யா ..!!! என்னை தெரியலையா? என்றேன் ...!!! அவர் தெரியலயே என்றார்.

நான் என்னை அறிமுக படுத்திகொண்டேன். அய்யா .. நான் இந்த ஊரில் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் கிழக்கு வாசலில் (இடத்தின் பெயர்) வசித்த பெரியசாமியின் மகன்.  என்னுடைய பெற்றோர் மறைவுக்கு பின் இந்த ஊரை விட்டு போன ஆறுமுகம். உங்க கடைல கூட நிறைய வாங்கி இருக்கேன் என்றேன். இப்போ என்னுடை வரப்போகும் நாட்களை இங்கே என் நண்பர்களுடனும் , இந்தா ஊர் மக்களுடனும் செலவிட போகிறேன் என்றேன். 

பெரியவர் என்னை ஒரு முறை ஆச்சரியமா பார்த்தார் ... !! பெரியசாமி மகனாப்ப நீ ...!!!! பல வருசமாசேப்பா ..!!! எப்படி இருக்க ..இதுதான் உன் பொண்டாட்டி ..புள்ளையா? என்றார் .. !!!. ஆமாங்கையா ..என்றேன் ..!!!.

என்னப்பா நீ இந்த ஊரை விட்டு போன பிறகு ...காலம் மாற மாற ஒவ்வொருத்தரா  ..இந்த ஊரை விட்டு பிழைப்பு தேடி  போய்ட்டாங்கப்பா என்றார் ..!! எனக்கு இது அதிர்ச்சியாய் இருந்தது ...இப்ப யாருமே இல்லியாங்கய்யா என்றேன். இப்போ ஒரு 20 குடும்பம் இருக்கும்னு நினைக்கிறேன் என்றார்.சரி அவர்களில் யாரவது தெரிந்தவர்கள் இருக்கிறார்களா பார்க்கலாம்  என்று கிளம்பினேன். அனைவரையும் பார்த்து விட்டு வருவதற்குள் மதியம் ஆனது ...உச்சி வெயில் சூடாக கொளுத்தியது. மனது ஒரே சோர்வாக இருந்தது ...காலையில் இருந்த உற்சாகம் இப்பொழுது இல்லை. மனம் வெறுமையாக இருந்தது. எதிர் பார்த்து வந்த யாரும் இங்கில்லை, என்னை நான் மிகவும் தனிமையாக உணர்ந்தேன். இந்த ஊரில் நான் வாழ்ந்த பழைய நினைவுகள் மனதில் பாரமாய் இருந்தது. என்னுடைய சந்தோசங்களை பகிர எனக்கு இங்க யாருமே இல்லை என்ற என் எண்ணம் என் சோர்வை அதிகமாக்கியது.

என் மனைவி, என்னிடம் திரும்ப போய்டலாமாங்க என்றாள்...!!! எனக்கு திரும்பி போகவும் மனம் இல்லை ...இங்க இருக்கவும் பிடிக்க வில்லை என்றேன் ..எனக்கு தெரிந்த பழகிய நண்பர்கள் யாரும் இல்லையே என்கின்ற கோவம். அப்படியே சோர்வை போக்க ஒரு மரத்தின் நிழலில் வந்து அமர்ந்தோம். சற்று தொலைவில் , காலையில் பார்த்த பெரியவர் வருவது தெரிந்தது. இந்த ஊரில் இவர் ஒருவர்தான் என்னை தெரிந்தவர் என்று நினைத்து கொண்டேன்.

அந்த பெரியவர் என்ன தம்பி ..இங்க உட்காந்திட்டிங்க ...என்று கூறிகொண்டே என் அருகில் வந்து நின்றார். நான் அவரை பார்த்து கொஞ்சம் சிரமமாய் புன்னகைத்தேன்.....அந்த பெரியவரும் சிரித்துகொண்டே .தம்பி இந்த இடம்  நியாபகம்  இருக்கா , நீங்க உங்க நண்பர்கள் அனைவரும் கூடுமிடம் ... இங்க சின்ன புள்ளைல நீங்க  நட்ட மரமதான் இது ... அதன் அடியில்தான்  உட்காந்து இருக்கீங்க என்றார் ..என்றார் சிரித்துக்கொண்டே . எனக்கு இது இன்ப அதிர்ச்சி ..என் கண்களில் கண்ணீர் .... என மனைவியிடமும் , மகனிடமும் சந்தோசமாய் கூறினேன் ..."இது நான் நட்ட மரம்.....இது நான் நட்ட மரம் ...."அவர்கள் என்னை ஒரு குழந்தையை போல பார்த்தார்கள் ...பரவா இல்லை ... இந்த ஊரில் என் பழைய நண்பர் யாரும் இல்லை என்று நினைத்து வருந்திய எனக்கு ..இந்த மரம்தான் ஒரு ஆறுதல். இது நான் நட்ட மரம். 
இந்த பதிவு பிடிச்சிருந்தா தயவுசெய்து உங்க ஓட்டை பதிவு செய்யுங்க...!!

No comments:

Post a Comment